சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியதாகவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்காது என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 30,000 பேரை அரசு வேலைகளுக்கு நியமிக்க 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமான 17,500 ரூபாயும் ஏப்ரல் முதல் 27,000 ரூபாவாக வழங்கப்படும் என்றும், அடுத்த ஜனவரியில் வழங்கப்படும் 3,000 ரூபாயுடன் இது 30,000 ரூபாயாக அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,350 ரூபாய் என்றும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.