ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (விநாயகர்...

1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு)

0Shares

இந்து சமுத்திரத்தின் நித்திலம் என சிறப்பிக்கப் பட்டும், திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்டும் சிறப்புற்று விளங்கும் இலங்கை திருநாட்டின் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் கடல் சூழ்ந்த மாநகரே நீர்கொழும்பு.

நீர்கொழும்பின் தமிழர் வரலாறு இன்று நீர்கொழும்பில் இருக்கும் ஒரு சிலரை தவிர்ந்து ஏனையோருக்கு சரியாகத்தெரியாது.

சிலர் நினைகின்றனர்  நீர்கொழும்பில் தமிழர்கள் மிக குறுகிய காலத்திலேயே  குடியேறினார்கள் என்று.  இப்படி நாங்கள் கூறுவதற்கு காரணம் நீர்கொழும்பில் வாழும்  இன்றய இளம் சமுதாயத்தில் ஒரு சிலரிடம் நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலயம் அமைக்கப்பட்டு எத்தனை வருடங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைகிண்றீர்கள் என்று  கேட்டபோது ஒருசிலர் 40 வருடங்கள் இருக்குமென்றனர். இன்னும் சிலர் 50,60 வருடங்கள் இருக்குமென்றனர். சிலர் சுமார் 80 வருடங்கள் இருக்குமென்றனர். அவர்களுக்கு தெரியவில்லை நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலய வரலாறு 264 வருடங்கள் பழமைவாய்ந்தது என்று.

அப்போது தான் தெரிந்து கொண்டோம் இன்றய நீர்கொழும்பு தமிழ் சமூகத்தில் ஒருசிலரை தவிர்ந்து ஏனையோருக்கு சரியான வரலாறுகள் தெரியவில்லை என்று  அவர்களை தெளிவு படுத்தத்தான் நீர்கொழும்பின் தமிழர்  வரலாறுகளை தேடி தொகுத்து இணையம் ஊடக  வழங்க எங்கள் ஊடகம் சார்பாக முடிவு செய்தோம்.

அந்தவகையில் முதலில் நீர்கொழும்பில் உள்ள இந்து கோவில்களின் வரலாறுகளை தொகுத்து வழங்க முடிவு செய்தோம்.

வரலாறுகளை ஆதார பூர்வமாக வெளியிட நீர்கொழும்பில் வெளியிடப்பட்ட தமிழ் புத்தகங்களை தேடிப்பெற்று தொகுத்து வழங்குகின்றோம்.

இப்படி ஒரு முயற்சிக்காக நீர்கொழும்பு இந்து இளைஞ்சர் மன்றத்தினரால்  2008ம் ஆண்டு வெளியிடப்படட பவள மலர் புத்தகத்தில் இருந்து  சில தகவல்களை எடுப்பதற்கு அனுமதிபெற தற்போது வெளிநாட்டில் உள்ள  அப் புத்தகத்தின் இதழாசிரியர் திருமதி. கங்கா தேவி முருகன் (முன்னாள் உப அதிபர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) அவர்களை தொடர்பு கொண்டோம். அப்போது அவர்கள் பெரும் மகிச்சியுடன்

   எதிர்கால சந்ததியிற்கு மிக முக்கியம் என கருதி பாடசாலை, கோயில், மன்றம், அ.நெ பா ஆகியவற்றின் பதிவுகள் தயாரித்தேன் உங்கள் பேனாவுக்கு என் வாழ்த்துக்கள் மகனே தொடருங்கள்

என்று வாழ்த்தி ஆசிர்வாதம்  செய்தார்கள். அவர்களுக்கும்,மேலும் சில தகவல்கள் எமக்கு தந்துதவிய திரு.சு.நவரத்னராசா அவர்களுக்கும் முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொல்கின்றோம்.

புராண வரலாற்றில் நிகும்பலை என குறிப்பிடப்படுவதும் கொழும்பு அருகில் உள்ளதும் சிங்களத்தில் மீகமுவ என்று அழைக்கப்பட்டும் தமிழில் தேனூர் என்றும் இது அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில மொழியின் ஆதிக்கமும், ஏனைய மதங்களின் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்பும் இருந்த காலத்தில் அருட் செல்வத்தை அள்ளி வழங்கி அன்புக்கரமாய் எல்லாவகையான சித்திகளையும் வழங் குவதற்காக, ஸ்ரீ சித்தி விநாயகரை மூல மூர்த்தியாக கொண்டு அமைக்கப்பட்டதே நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்.

தன்னை வழிபடுவோருக்கு புத்தியும் சித்தியும் கொடுக்கவும், மனிதன் ஞானமும் வெற்றியும் கைவரப்பெற்றால் பூரணத்துவ நிலையை அடையவும் வேண்டி சைவப்பெரியார் வெ.அருணாச்சல செட்டியாரின் மனதிலே ஒரு விநாயக ஆலயம் அமைக்க வேண்டுமென ஓர் எண்ணம் எழுந்தது. அவரது சகோதரர் வெ. குழந்தைவேல் செட்டியாருடன் சேந்து, தமது உடமையாய் இருந்த காணியில் ஒரு சிறுகோயிலை 1754 மார்கழி 23ம் திகதி அமைத்தார்.(அக்காலகட்டத்தில் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் வேறு எந்த ஒரு மதஸ்தலங்களும் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை)

நன்னாளில் சுபமுகூர்த்த வேளையில் விசாலமான இருசெவிகள், ஒற்றை தந்தம், பிரணவ வடிவம் போன்ற கோலத்திலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகரை பிரதிட்டை செய்தனர்.

ஆற்றங்கரையின் அயலில் (டச்சுக்கால்வாய்) அரசமரமும் வேம்பும் சேர்ந்த தாவரத்தின் முன்னிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, வானோரும் மண்ணோரும் காதலால் கைகூப்பித் தொழுதபடியாக  ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் வீற்றிருக்கின்றார்.

நாள்தோறும் அடியார் கூட்டம் பெருகிவரும் காலகட்டத்தில் செட்டியாரின் சகோதரர் குழந்தைவேல் செட்டியார் சிவபதமடைய, அருணாச்சல செட்டியார் பெரும் பொருட்ச்செலவில் இக்கோவிலைப் பெருப்பித்தார்.

சீரிய ஒழுக்கமும் ஆகமவேத அறிவும் மிக்க ஓர் அர்ச்சகரை நியமித்து வேதசிவாகமப்படி நித்திய நைமித்திய கிரியைகளை செய்வித்துவந்தார்.

காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறன்றது. திரு.அருணாச்சல செட்டியாரும் காலமாகிவிட, அவரது துணைவியார் தனுஷ்கோடி அம்மையார், சகோதரரின் துணைவி தங்கமையார், மகள் தைலம்மையார் ஆகியோரின் கீழ் கோவில் பரிபாலனம் சென்றடைந்து விட்டது.

அம்மையார்கள் மூவரும் முதுமையடைய இக்கோவில் பரிபாலனஞ்  செய்யமுடியத்தால் 1880 ஐப்பசி 25ம் திகதி ஒன்பது பேரைக் கொண்ட பரிபாலன சபையிடம் ஒப்படைத்து 5372ம் இலக்க தருமசாதன உறுதியும் செய்து முடித்தனர்.

அதுவரை காலமும் தனி உடைமையாயிருந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலனம் 1880இல்  மக்கள் உடைமைக்கு மாறியது.

1880 ஐப்பசி 25ம் திகதி அமைக்கப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முதலாவது பொது பரிபாலான சபை உறுப்பினர்கள்.

  1. திரு.அ.கந்தசாமிப்பிள்ளை
  2. திரு.கு.வைரமுத்துப்பிள்ளை
  3. திரு.சு.பிரமநாயகம்
  4. திரு.க.பொன்னையாச் செட்டியார்
  5. திரு.சி.குமாரசாமி செட்டியார்
  6. திரு.க.தம்மையாச் செட்டியார்
  7. திரு.அ.சின்னத்தம்பி செட்டியார்
  8. திரு. கோபாலச் செட்டியார்
  9. திரு. …………………………………………

ஆகியோர்களாவர். அதன் பின்னர் காலத்துக்குகாலம் அவர்களது சிறப்புப்பணி தொடர்ந்தது.

குறிப்பாக 1921ம் ஆண்டு ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களாக  இருந்த  கதிரவேலுப்பிள்ளை,சின்னப்பு ஐயாத்துரை, கந்தசாமி சிதம்பரம்பிள்ளை, சுவாமிநாதர் நாகேந்திரன் ஆகிய நால்வர்  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முற்றலில் இருந்த காணியை விலைக்கு வாங்கி ஆலய உடமையாக்கினார். அதன்பின்  பரிபாலனம் பின்வருகின்றவர்களிடம் மாறியது.

அமரர், சட்டத்தரணி திரு.ச.க.விஜயரத்தினம் J.P  U.M  1925ம் ஆண்டிலிருந்து 1955ம் ஆண்டுவரை(அவர் இறக்கும் வரை) 30 ஆண்டுகள் ஆலயபரிபாலன சபைத்தலைவராக இருந்து அரும்பணியாற்றியுள்ளார்.

திரு.ச.க.விஜயரத்தினம் ஐயா அவர்களின் காலத்திலும் அதன் பின்னரும்   ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு பின்வருமாறு

  • ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர்,புதிய உற்சவ மூர்த்தி, காளிங்கநர்த்தனர்,சமயகுரவர்கள்,நவகிரக மூர்த்திகள் என்போருக்கெல்லாம் படிமங்கள் அமைக்கப்பெற்றமை.

  • உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய பெருமானுக்கு அமரர் சா.வே.சண்முகப்பிள்ளை அவர்களும் நவக்கிரக மூர்த்திகளுக்கு அமரர் ம.முனியாண்டிச் செட்டியாரும் கோயில்கள் அமைத்துக்கொடுத்தமை.

  • 1949 இல் மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீர்கொழும்பு வாழ் சைவமக்களிடையே  கூட்டுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தி கோவில் சந்நிதானத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக நடாத்திவைத்தமை                                                                                                                     

 

  • நித்திய, நைமித்திய, காமிய கிரியைகள் சிவாகம முறைப்படி நடாத்தப்பட்டமை.

  • தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றமை. சிலவசதியீனங்கள் காரணமாக தடைப்பட்ட போதிலும் 1965 முதல் இன்றுவரை சீரிய முறையில் சென்று வருகின்றமை.

  • ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியன்று  தேர் மாலையில் புறப்பட்டு நகர வீதி வழியாக நீதிமன்றம்,சிறைச்சாலை வழியாக சுற்றி பின் கடற்கரைத்தெரு வழியினுடாக ஆலயத்தை வந்தடைந்தமை.
  • இப்பிரதேச வாழ் மக்கள் தேர்திருவிழாவை முன்னிட்டு தமது வாயிலில் வாழைமரங்களை நாட்டி மகரதோரணங்கள் கட்டி விநாயகப்பெருமானை வரவேற்று உபசரித்தமை. அர்ச்சனைகள் செய்துகொண்டே தேர் மெல்ல மெல்ல ஊர்ந்து  சென்று அடியார்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்க பெற்றமை.

  • ஆலயத்துக்கு உடைமையாயிருந்த முன் காணியில் அரசும் வேம்பும் பின்னி பிணைந்து ஒரு பெரிய விருட்சமாக விளங்கிய மரநிழலின் கீழ் நாகலிங்க மூர்த்தி பிரதிட்டை செய்யப்பட்டமை முன்னேஸ்வரத்துக்கு செல்வோர் நிட்சயம் காளியம்மனை தரிசிக்காமல் வீடு செல்வதில்லை. அதுபோன்றே விநாயகனை வழிபட்ட அடியார்கள் நாகலிங்க சுவாமிக்கும் கற்பூரம் கொளுத்தி வளம் வருதலை செய்தமை.
1932ல் ஆலய முன்றலிலுள்ள ஆலய உடைமையான ஓலை மண்டபத்தில் இயங்கிய இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்தமையால் அம்மண்டபத்தை  இருபக்கங்களிலுள்ள விறாந்தையை விஸ்தரித்து முகப்பு கோபுரம்,அதன்வாயில் யன்னல் கதவும் போடப்பட்டு விஸ்தரிக்க பெற்றமை. இதற்குரிய செலவுகளின் பெரும்பகுதி தலைவரால் உபகரிக்கப்பட்டமை.
இவ்வாறான பணிகளை ஆலயத்துக்கு ஆற்றி இந்து மக்களிடையே சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அயராத முயற்சியால் செயற்பட்டு சைவ உலகினுக்குப் பெருஞ்சிறப்பினை அளிப்பதாகும்.
அவருக்குப்பின் தற்காலிக தலைவராக அமரர் திரு.மு.அருள்பலம் 18/01/1955 தொடக்கம் 14/08/1955 வரை இருந்து அவர்வழியை பின்பற்றி நடந்தார். அதன்பின் ஆலயபரிபாலன சபை தலைவராக அமரர் திரு.ச.கசண்முகம் 14/08/1955 தொடக்கம் 07/07/1975 வரை பணியாற்றியபோது பல அரும்பெரும் பணிகளைக்குறிப்பிடலாம்.
  • 1965இல் ஆலய வரலாற்றிலே சிறந்த திருப்பமான கலையழகு மிகுந்த சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்ட விழா 06/09/1967 இல் நடைபெற்ற விநாயக சதுர்த்தியன்று விநாயகப்பெருமான் தேரேறிவந்து அருள்பளித்தமை.

 

  • தன்கொட்டுவ யாழ்.வர்த்தகர்களது பொருட்ச்செலவில் தேர்முட்டி அமைக்கப்பெற்றமை.

 

  • அன்றிலிருந்து இன்றுவரை ஒன்பது தினங்கள் தினசரி காலை 10 மணிக்கு விசேட அபிஷேகமும் மாலை 7.00 மணிக்கு விசேட பூஜையும் சுவாமி உள்வீதி வலம் வருதலும் நடைபெற்று 10ம் நாள் ஆவணி நன்னாளில் அஷ்டோத்தரசத சங்காபிஷேகமும் மாலை தேர் நகர்வலம் வருதலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எம்பெருமான் இரத்தத்தில் ஆரோகணித்து கடற்க்கரை வீதி, புனித செபஸ்தியன் வீதி, ஆவேமறியா வீதி, பிரதான வீதி, கிரீன்ஸ் வீதி, டீ குருஸ் வீதி, மீண்டும் பிரதான வீதி, கடற்கரை வீதி வழியாக நகர்வலம் வந்து தமதாலயத்தை அடைவார். ஆலய பரிபாலன சபையினரும் ஸ்ரீ சித்திவிநாயகர் தொண்டர் அணியினரும் சிறப்பாக இரதோற்சவத்தை நடாத்தி வைப்பதுண்டு. அடுத்தநாள் திருவூஞ்சல், வெள்ளியன்று வைரவர் பூசையும் இடம்பெறும் வழக்கம் உண்டு.

  • மாதச் சதுர்த்திதோறும் அடியார்களது உபாயமாக நடைபெற ஒழுங்கு செய்தமை.

 

  • 01/10/1971 இலிருந்து நான்கு காலப்பூசை ஒழுங்கான முறையில் யாதொரு குறைவின்றி நடைபெற்றது மன்றி அர்ச்சனை, அபிடேகம், நேர்த்திக்கடன் முதலியவற்றுக்கு ஆலய பரிபாலன சபையினரால் பற்றுச்சீட்டு முறையும் கொண்டுவரப்பட்டமை.

 

  • 03/12/1971 முதல் பிள்ளையார் பெருங்கதை உற்சவம் சீரோடு நடைபெற்றவேளை விழா காலத்தின் போது தொடர்ந்து 21 தினங்கள் நல்லறிஞர்கள் வருகைதந்து பிள்ளையார் கதை படித்து விளக்கம் கூறப்பட்டமை. ஆனால் தற்போது  இவ்வூரில் வசிக்கும் சிறப்புமிக்க சைவப்பெரியோர்களால் கதை வாசிக்கப்பட்டு பொருள் கூறப்பட்டு வருகின்றதை காணலாம்.

இவாறான பணிகள் ஆற்றி  எம்பிரதேச சூழலில் சைவத்தையும், அது தொடர்பான தமிழ்கலாச்சாரத்தையும் வளர்த்து வந்தமை போற்றுதற்குரிய விடயமாகும்.

அவரது பணியினை தலைமேற் கொண்டு ஆலயபரிபாலன சபை தலைவராக அமரர் திருஜெயம் விஜயரத்தினம்(சிவநெறிப் புரவலர், சமாதான நீதவான்) 1972 முதல் அவர் இறக்கும்18/01/2013 வரை ஆலய திருப்பணியோடு நின்றுவிடாது கல்விப்பணி, சமுதாயப்பணி ஆகியவற்றிலும் தமது சேவையை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • விநாயக பெருமானது அருளாலும், ஆலய பரிபாலன சபைனது பூரண ஒத்துழைப்பாலும், நீர்கொழும்பு வாழ் சைவ நன் மக்களது அயராத உழைப்பினாலும் ஆலய சூழலலிருந்து 35 பேர்ச் காணினும் கட்டிடமும் ரூ 35000/=  விலையில் வாங்கப்பட்டு ஆலய சொத்தானது தொடர்ந்து பின்புறத்திலுள்ள 25 பேர்ச் காணியும் ரூ 25000/= விலையில் வாங்கி அதுவும் ஆலய உமையாக்கபட்டது.

 

  • ஆலயத்தை பெருப்பிக்கும் பணி 16/02/1975 இல் ஆரம்பமானது. ஆலயபரிபலான சபையினரோடு  இன்னும் எண்மர் இணைந்து திருப்பணி வேலைகளில் இறங்கியமை எவ்வளவு தூரம் சைவத்தை இப்பிரதேசத்தில் நிலைபெற வேண்டும் என ஆதங்கத்தை எடுத்துக்காட்டுகின்றது.

 

  • 16/02/1976 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு வழிபாடு  ஆற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
  • 13/07/1981 இல் திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிதாக கருவறை,நடேசர் ஆலயம், மகா மண்டபம், வசந்த மண்டபம், சுப்ரமணிர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம், வைரவர் ஆலயம், நவகிரக கோட்டம், களஞ்சிய அறை, மடப்பள்ளி, யாகசாலை என்பன அமைக்கப்பட்டன. சுற்றி மதிலும் கட்டப்பட்டன.

  • மகா கும்பாபிஷேகம் வைபவத்தை பிரதமகுரு பிரதிஷ்டா சிரோன்மணி சிவஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் தலைமையில் 10பேர் அடங்கிய சிவவேதியர்கள் கிரியைகளில் ஈடுபட்டிருந்தனர். அதனை தொடர்ந்து ஆலய மண்டலாபிஷேகம் 45 நாட்கள் நடைபெற்று 1008,108 சங்காபிஷேகங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  • ஆலய தெற்குபபுற மதிலை சீராக்கும் பொருட்டு திரு வீ. நவரத்தினம், திரு.ஜெயம் விஜயரத்தினம் ஆகிய இருவரும் தமது காணியிலிருந்து நிலத்தினை ஆலயத்துக்கு அன்பளிப்பு செய்தனர்.

 

  • கும்பாபிஷேக மலர் ஒன்று ஆலய பரிபாலன சபையினரால் 1981ல் வெளியிடப்பட்டது.

 

  • திருப்பணி வேலைகள் ஒருபோதும் நிறைவு பெறுவதில்லை என்பதற்கிணங்க இராஜகோபுர திருப்பணியும், உட்பிரகாரக்கொட்டைகளும்  அமைக்க முனையும் காலகட்டத்தில் ஆலய குருமார்கள் அடிக்கடி மாற்றலாகி செல்லும் வழக்கம் ஏற்பட்டது. எனினும் விநாயகப்பெருமானது பெருங்கருணையால் ஒரு சிவாச்சாரியார் கிடைக்கபெற்றமை ஆலய பரிபாலன சபையினர்க்கு பாலில் தேன் வார்த்தது போலிருந்தது.

  • சிவஸ்ரீ குகதாச குகேஸ்வர குருக்கள் ஐயா அவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை இவ் ஆலயத்தில் ஆலய பிரதம குருக்களாக இருப்பது ஆலய வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

  • அவரது வருகையால் ஆலய சூழலில் பல்வேறு  நைமித்திய,காமிய கிரியைகள் வருகின்றன. ஆலய பரிபாலன சபையினரும் தமது பூரண ஒத்துழைப்பினை நல்கி பின்வரும் கைங்கரியங்களை சிறப்பாக சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகையாகாது.

  • 1990இல் ஆலய பரிபலான சபையினரால் ஆலயத்துக்கென இருந்த காணியில் 6075 சதுர அடி விஸ்தீரணமுடைய கலாசார  மண்டபத்தை கட்டுவதற்கு இந்து இளைஞர் மன்றத்துக்கு வழங்கப்பட்டது.

 

  • 1994 இல் ஆலயத்துக்கு இராஜகோபுரம்  அமைக்கப்பட்டு  மகா கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது.

  • 1995இல் இருந்து இன்றுவரை வரலட்சுமி விரதத்துக்குறிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.

  • 1997 இலிருந்து இன்றுவரை விநாயகருக்கு  இலட்சார்ச்சணை காலையும் மாலையும் நடைபெற்று வருகின்றது.

 

  • 1998 இல்  கஜலட்சுமி சந்நிதானம் அமைக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை நவராத்ரி பூசை சிறப்பாக நடைபெறுகின்றது. கொலுவும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டமை அதன்  சிறப்பம்சமாகும்.

  • 2002 இல் ஆலய பரிபாலன சபையினரால் ஆலயம் முழுவதும் நிலத்துக்கு தரையோடுகள் பதிக்கப்பட்டது.

 

  • 2007 இல் ஆலயத்துக்கென 350 கிலோ நிறையுடைய காண்டாமணி நிறுவப்பட்டது.

 

  • சனீஸ்வரனுக்கும்ராகு கேதுவுக்கான யாகம் போன்றன இடம் பெற்று பக்த அடியார்களது அல்லல்களை தீர்ப்பதற்கான ஒழுங்குகளை ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டமை பாரத்துதலுக்கு உரியது.

இவ்வாறு ஜெயம் விஜயரத்தினம் ஐயா தலைமையில் திரு.சு.க.நவரெட் னராஜா அவர்களையும் செயலாளராய்க் கொண்டு ஆலய பரிபாலன சபையினரால் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த சந்தர்ப்பத்தில்  2012 ஆலயத்திருப்பணிகள் நடைபெற்று ஆலய சுற்று மண்டபம், கலை அம்சங்கள் நிறைந்த தூண்கள்(தூண்வேலைகள் இன்னும் நிறைவடைய வில்லை) , மூன்று வளைவுகளான கொங்கிரிட் கூரைகள் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

  •  2012/07/07 இல் ஆலயத்தில் உள்ள அனைத்துவிக்கிரகங்களுக்கும்  எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.

 

  • 2012/07/08 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இவ் கும்பாபிஷேகத்தை நயினை பிரதிஷ்டா பூசணம் சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக் குருக்கள் அவர்களினதும், சிவஸ்ரீ விஸ்வநாராயணக் குருக்களின் குரு ஆசியுடனும், பிரதிஷ்டா பிரதம குரு ஆகமப் பிரவிணர் சிவஸ்ரீ குகதாச குகேஸ்வர குருக்கள் அவர் களின் தலைமையில் ஏறக்குறைய 25க்கு மேற்பட்ட குருமார்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக கிரியை களை நடாத்தியமை விஷேட அம்சமாகும் .
  •  2013 ஆம் ஆண்டு ஜெயம் விஜயரத்தினம் ஐயா அவர்களின் மறைவுக்கு பின்னர் தற்காலிக தலைவராக அடுத்த பொதுக்கூட்டம் வரை  திரு.தேவராசா ஐயா அவர்கள் தலைவராக நியமிக்க பட்டார்கள்.

  •  அமரர் ஜெயம் விஜயரத்தினம் ஐயாவின் மறைவுக்கு பின்னர் ஒருவருடத்தில் கூடிய ஆலய பரிபாலன சபைக்கூட்டத்தில்  ஜெயம் விஜயரத்தினம் ஐயாவின் பாரியார்(மனைவி) யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் அம்மையார் அவர்கள் ஆலய பரிபாலன சபை தலைவியாக தெரிவு செய்ய பட்டார்கள்.

இவ்வாறு திருமதி. யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் அம்மையார் அவர்கள் தலைமையில், இ.ஆ.க.சொக்கநாதன் ஐயா அவர்கள் செயலாளராகவும், திரு.பெ.பாரத்குமார் ஐயா அவர்கள் பொருளாளராகவும் இக் கோவில் நிர்வாகத்தை மிக சிறந்த முறையில் முன்னெடுத்து செல்கின்ற இவ் ஆலய பரிபாலன சபையினரின் அளப்பரிய பணி என்றும்  நீர்கொழும்பு தமிழர்களின் அழியா சொத்தாகும்.

ஆலயத்தில் நடைபெறும் அலங்கார உற்சவங்கள் என்றாலும் சரி, மாத சதுர்த்தியன்று சுவாமி உள்வீதி வலம் வருதல் என்றாலும் சரி திரு.புஸ்பராஜ் அவர்களின் தலைமைலான அலங்காரக்குழுவின் சாத்துப்படி அலங்காரங்கள் என்றுமே மறக்க முடியாது.

ஒரு நாளைக்கு போய் வழிப்பட்டவர்களை அடிக்கடி வழிபாடாற்ற செல்ல வேண்டும் என தூண்டுகின்றது பக்த அடியார்களின் மனம். எனவே எந்த கோவில் நிகழ்ச்சிகளிலும் ஏராளமான பக்த அடியார்களை காணமுடிகின்றது.

ஸ்ரீ சித்திவிநாயகர் தொண்டரணியினரின்  அளப்பெரிய சேவைகளாலும், நீர்கொழும்பு இந்து வர்த்தகர்கள், மற்றும் இந்து மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இக் கோவிலில் நடாத்தப்படும் நிகழ்வுகளும் விழாக்களும் மிக சிறந்த முறையில் இடம்பெறுகின்றது என்று சொன்னால் மிகையாகாது.

இவ் வருடம் எதிர்வரும் 13ம் திகதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று  இடப்பெறவுள்ள தேர் திருவிழாவை முன்னிட்டு எம்பெருமான் ஆலயத்தில் பத்துநாள் பூசைகள் தற்போது காலையும்,மாலையும்  இடம்பெற்றுக்கொண்டு உள்ளது.

எனவே மெய்யடியார்கள் அனைவரும் இவ் பூசைகளில் கலந்து கொண்டு எம் பெருமானின் அருளையும் ஆசிர்வத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகும்பலை என்னும் சிறப்பு பெயர் பெற்று பலவளங்களும் நிறைந்து  வளங்கொழிக்கும் நீர்கொழும்பின்தண் அடியார்களுக்கு அருள் புரியும் சர்வலோக நாயகராகிய ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் கோயில் அற்புத மூர்த்தியாய் எழுந்தருளி அடியார்களிடை இன்னலை போக்கியும் வழிபாடேற்று சர்வ சித்திகளை வழங்கியும் திருக்காட்சி தந்து அருளுகின்றார். 

இவ் ஆலயத்தின் வரலாற்றை இணையத்தில் பதிவு செய்யும் முதல் நபர்களாக நாம்  திகழ்வதற்கு காரணம் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் ஆசிர்வாதம் என்று நாம் கருதுகின்றோம்.

ஆதாரங்கள் பெற்ற விபரம்:-  நீர்கொழும்பு இந்து இளைஞ்சர் மன்றம் பவளமலர் இதழாசிரியர் திருமதி. கங்கா தேவி முருகன் (முன்னாள் உப அதிபர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி),திரு.சு.நவரத்னராசா புகைப்படஉதவி- விஜயதீபன் 

இணையத்தில்தொகுத்து  வழங்கியது:- சுப்பையாதேவர் செல்வகுமார்(சு.செல்வா)(colourmedia.lk)

நீர்கொழும்பில் தமிழர் வரலாறுகள் தொடரும்,,,,,,,, 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments