ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்தவரின் இறுதி கிரியைகள் தொடர்பான அகில இலங்கை ஜமிய்யதுல்...

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்தவரின் இறுதி கிரியைகள் தொடர்பான அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் அறிக்கை

0Shares

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கையாளுதல் பற்றிய மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதை நாம் அறிவோம். இதில் இவ்வைரஸின் காரணமாக மரணித்தவர்களின் பிரேதங்கள் தகனம் செய்ய வேண்டுமென்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஏனைய சிவில் அமைப்புகள், வைத்தியர்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் என பலரும் இதுதொடர்பில் செயற்பட்டனர். இதன் விளைவாக குறித்த விடயம் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை எரிக்கவும் புதைக்கவும் அனுமதித்துள்ளதை மேற்கோள் காட்டி, இலங்கைவாழ் முஸ்லிம்களின் இவ்வாறான ஜனாஸாக்கள் புதைக்கப்பட நடவடிக்கை எடுக்கும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் கடந்த 2020.03.24ஆம் திகதி நம்நாட்டு ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட்டோருக்கு கடிதங்கள் மூலம் வேண்டிக் கொண்டது.

இம்முயற்சிகளின் விளைவாக கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை நிபந்தனைகளுடன் புதைக்கவும் முடியும் என்ற மருத்துவ நடைமுறை வழிகாட்டல் கடந்த 2020.03.27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது. எனினும் நேற்றைய தினம் மேற்குறிப்பிட்ட புதிய வழிகாட்டலின் அடிப்படையில் குறித்த முஸ்லிம் சகோதரரின் ஜனாஸாவை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த ஜனாஸா தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீதுவைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்கள் உரிய முறையில் ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

இது விடயமாக இன்று சுகாதார அமைச்சர் மற்றும் கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளடங்கிய ஒரு குழு பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. அத்துடன் இவ்விடயம் இன்று மீண்டும் நம்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எல்லா விடயங்களும் நல்ல முறையில் நடப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments