31 C
Negombo
Wednesday, August 5, 2020
Home சிறப்புக்கட்டுரைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஆயிரத்துக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் சூழ்ச்சி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஆயிரத்துக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் சூழ்ச்சி!

கட்டுரை- ராமசந்திரன் சனத்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் என்ற செய்தி வெளியானகையோடு மலையகத்துக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பது போலும், இனி தேயிலை தேசமெங்கும் தேனும், பாலும் பாய்ந்தோடும் என்ற தொனியிலும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

வழமையாக சமூகவலைத்தளங்களில் இ.தொ.கா.புராணம் பாடுபவர்களுக்கு ஆயிரம் ரூபா விவகாரமானது மனதுக்குள் இன்ப மழையை பொழிவித்து – ஆனந்த அலைகளை முட்டிமோத வைத்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதம் முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதியாக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டளை பிறப்பித்துள்ளமை வாழ்த்தி – வரவேற்ககூடிய விடயமாகும்.

அதேபோல் கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு 69 இலட்சம்பேர் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு இருக்கின்றது என்ற விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்துக்கு அரச பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் மலையகத்திலுள்ள பிரதான தொழிற்சங்கம் என்ற அடிப்படையிலும் இ.தொ.கா. உரிமை கொண்டாடிவருகின்றது

மார்ச் 2 ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதியளவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள – அதாவது ‘அவர்கள்’ மொழியில் கூறுவதானால் பொங்கள் பரிசானது தேர்தல் கையூட்டாகவும் கருதப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டுமுதல் 2015 வரையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியே நீடித்தது.தொண்டமானும் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தார். அக்காலப்பகுதியிலும் கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன .ஆனால் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவில்லை. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தையும் மூன்றாந்தரப்பாக இணைந்து – கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்க தலையீட்டை ஏற்படுத்திக்கொடுத்த பெருமை தமிழ் முற்போக்கு கூட்டணியையே சாரும் என்ற கருத்தையும் நாம் ஏற்றாக வேண்டும். எனினும், 50 ரூபாயை பெற்றுக்கொடுக்க முடியாமல்போனது அக்கூட்டணிக்கான அரசியல் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது.

ஆனால் இந்த ஆயிரம் ரூபா விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் நல்லவர்கள்,வல்லவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது.

உள்ளாட்சி சபைகளின் நிதிகள் தோட்டப்புற அபிவிருத்திக்கு ஒதுக்கப்படுகின்றமை சட்டவிரோதமாக கருதப்பட்ட நிலையில் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு பிரதேச சபை சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது யார்?

மலையகத்துக்கென தனியானதொரு அதிகார சபையை உருவாக்குவதற்குசட்ட ஏற்பாடுகளை செய்தது யார்?

கோழிகூடாகவே இருந்தாலும் நிலவுரிமையுடன் தனிவீட்டில் வாழும் நிலையை உருவாக்கியது யார்?

அதி உயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பிலும் பிரேரணைகள் வருவதற்கு வழிசமைத்துகொடுத்தது யார்?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பயணம் தொடர்பிலும் விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளில் கூட்டணியால் சில விடயங்கள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் ஒப்பிடுகையில் இ.தொ.காவின் நகர்வு இன்னும் பின்னிலையிலேயே இருப்பதை ஊகிக்க முடிகின்றது.

அதாவது சமூகமாற்றத்துக்காக முன்னோக்கி பயணிப்பதற்கான தடைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி தகர்த்துள்ளது. அத்துடன், வேகமாக அடித்தாடுவதற்கான களமும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது ரி-20 பாணியில் இ.தொ.காவின் வேகம் இருக்கவேண்டும். ஆயிரம் கிடைத்துவிட்டது. இனி ‘கதம்…கதம்…” என நினைத்தால் அது தலையிடியையே ஏற்படுத்தும்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற கருத்தாடல் உருவாகியுள்ளது.அதற்கான நகர்வும் முன்னெடுக்கப்பட வேண்டும்.எனினும், தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை தடுத்து – அவர்களை தொடர்ந்தும் நாட் கூலியாக வைத்திருக்கும் திட்டமும் இந்த ஆயிரத்தின் பின்னால் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

காலாண்டு பகுதிக்கா அதாவது மூன்று மாதத்துக்கா இந்த கொடுப்பனவு வழங்கப்படும் அல்லது அடுத்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை நீடிக்குமா என்ற வினாவும் எழுகின்றது. கூட்டு ஒப்பந்தத்துக்கும் தற்போதைய சம்பள உயர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், இந்த சம்பள உயர்வை காரணம்காட்டி அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் சொற்ப அளவு உயர்வை கம்பனிகள் வழங்கலாம் – அல்லது ஒப்பந்தம் ஒத்திவைக்கப்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகலாம்.

தொழிலாளர்களின் வேலை நாடகள், கொழுந்து நிலுவை, தொழில் உரிமைகள் ஆகியவற்றில் தற்போதைய சம்பள உயர்வு எவ்விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற உத்தரவாதத்தை உரிமைகோரும் தரப்பு வழங்குமா?

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் மலையகத் தமிழர்களுக்காக பிரமாண்டமாக அல்லாவிட்டாலும் பிரதானமாக சேவைகளை செய்துள்ளது. ஆனால், நிலம் பறிப்பு, பஞ்சம், நாடு கடத்தும் ஒப்பந்தம் என சுதந்திரக்கட்சி ஆட்சியிலேயே பல துரோகங்கள் இழைக்கப்பட்டுள்ளன. அப்போது ராஜபக்ச குடும்பமும் சுதந்திரக்கட்சியிலேயே அங்கம் வகித்தது.

எனவே, இனியாவது மலையக மக்களின் சமூக – வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாறாக சம்பளம்தான் பிரதான பிரச்சினை, ஆயிரம் வழங்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்ற சிந்தனை வந்தால் அது பெரும் தவறு.

இ.தொ.கா, அவர்கள் என்ன செய்தார்கள் என ஆராய்ந்து – விமர்சனங்களை முன்வைக்காமல், தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை சேவைமூலம் காட்டவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

பார்வை தொடரும்……

- Advertisment -

Most Popular

ஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை !!! நடக்குமா ??

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;

இலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

வாக்காளர்கள் கவனத்திற்கு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே...

Recent Comments