தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்!
கடற்கோள்கையால் அழிந்த நம் வரலாற்றை அறிந்தால் அது உலக வரலாற்றையே மாற்றும். ஆம் குமரிகண்டம்தான் சற்று அறிவியல் ரதியாக பார்ப்போம்.
“கடற்கோள்கை”புவி ஒட்டில் நகரும் தட்டுகள் உள்ளன. இவை மலைத் தொடர்களின் எரிமலை இயக்கத்தால் உண்டாகின்றன. கண்டங்களின் விளிம்புகளிலுள்ள பெரும் கடல் தரை அகழிகளால் அழிபவை.
உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக்கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் “கிரௌன் மில்ன்” மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளைப் பார்த்துவிட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் மாமல்லபுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார்.
தமிழ்நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள் காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இத்தகவலை பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 11, 18, 25 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது பென்குவின் நிறுவனம் பிப்ரவரி 7, 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.
1991 மார்ச் 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவுகோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக்கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை வைத்துக்கொண்டு ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளேடு செய்தியாக்கியது. அப்படியென்றால், 11,000 ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது. அமெரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை மெய்ப்பிக்கச் சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மனித இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாகக் குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாகக் குறிப்பிடுகிறார். அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருந்திருக்க வேண்டும்.
சரி இப்போது நம் இலக்கியத்திற்கு வருவோம். உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று பாண்டிய அரச குலம். தமிழ்நாட்டை சங்க காலம் தொட்டே சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆள, மூவரில் மூத்தோனாகப் பழையோனாகப் பாண்டியனே இருந்தான். அவனை புகழ்ந்து பாட நம் புலவர்கள் இயற்றிய நூலில் ஒன்று.
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)
“தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் “தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும், குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”
இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் ‘கபாடபுரம்’ என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்.
அறிவியல் கண்டுப்பிடிப்பு- குமரித்தீவு என்பது ஒரு தொடர்ச்சியான கண்டம் அல்ல. அது சுமார் 12000 சிறு தீவுகள் அடங்கிய தீவு கூட்டம்- எம் முன்னோர்கள் 12000 என்ற கணக்கை எப்போவோ சொல்லிட்டு போய்ட்டான்.
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி:
“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண் திசை புகழ் தர ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு..”
முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன்- குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம் (என் கருத்து மட்டுமே). இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது. ஆம் இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட ” குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான் ” குமரிக்கண்டம் “. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு ,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது . தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையதுதான். நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் தோன்றிய இந்தக் கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440இல் பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம் ‘கபாடபுரம்’ நகரத்தில் கி.மு 3700இல் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 இல் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட தொல் இடங்கள் அகழ்வாய்வில் இருக்கிறது. அதில் முக்கியமான இடங்கள் ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடி.
ஆதிச்சநல்லூர்:
உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆடையின்றி அலைந்த காலத்தில் தமிழன் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு கூட பஞ்சாடை உடுத்தி மரியாதையாக இறுதிச் சடங்கை செய்துள்ளான் என்று கூறியது ஆதிச்சநல்லூர் ஆய்வு. அதை ஆய்வு செய்த தலைமை அகழாய்வாளர் சொல்கிறார் “ஆதிச்சநல்லூர் ஆய்வின் உண்மை நிலையை விரிவாக விளக்கினால் இந்திய வரலாற்று நூல்கள் அனைத்தும் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும்” என்று.
கீழடி:
உலக வரலாற்றாளர்களையே உற்று நோக்க வைத்தது கீழடி ஆய்வில் கிடைத்த பொருட்கள். ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறுகிறார்கள். சுமார் 2,200-ம் ஆண்டில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியிருந்த குடியிருப்புப் பகுதியாக இது இருக்கிறது. வரிசை வரிசையாக வீடுகள், மிக அகலமான செங்கற்கள், கனமான தட்டோடுகள், மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள், வீடுகளை ஒட்டி பெரும் அகலத்தில் நீண்ட சுவர்கள், தண்ணீர் வழிந்தோட வடிகால்கள், வட்டவடிவ உரையிடப்பட்ட கிணறு என நிலத்துக்குள் ஒரு நகரமே துயில்கொண்டிருக்கிறது. அதைத் துயில் எழுப்பும் முயற்சியில் தொல்பொருள் ஆய்வுத் துறை ஈடுபட்டது. நீருக்குள் மூழ்கும் நகரங்களை ஹாலிவுட் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் பார்க்கலாம். ஆனால் மண்ணுக்குள் இருந்து மேலே எழும் நகரங்களை தமிழ்நாடு போன்ற மனித நாகரிகத்தின் பாரம்பரியத் தொட்டில்களில்தான் பார்க்க முடியும். (குறிப்பு : இங்கு கிடைத்த தமிழ் மொழிப் பெயர்கள் ‘ஆதன், உதிரன், திசன்’ ஆதன் பெயருக்கான விளக்கத்தை வாசகர்கள் தேடுங்கள் வியப்பூட்டும்)
கடலூர் மாவட்டத்தில் தொல்லியல் கள ஆய்வில் கல்ஆயுதங்கள் தயாரித்த தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நுன்கற்கால மக்கள் தங்களுக்கு தேவையான கல் ஆயுதங்களை குவாட்சைடின் மறு உருவமான ”கங்ளோமறைட் ”அதாவது கூழாங்கற்களில் இருந்து தயாரிக்கப்பட்டமை குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வெட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்ததும் அதனை அழித்துவிட்டோம்.
சிந்துசமவெளிக்கு முந்தைய நாகரீகமென்பதாலோ என்னவோ இந்திய அரசு அதிர்ந்து போய் இந்த ஆய்வைத் தொடரவிடாமல் செய்துவிட்டது. இந்த ஆய்வைப் பல ஆண்டுகளாக மேற்கொண்ட அமர்நாத் “தற்போது குறைந்த நிலப்பரப்பே கையகப்படுத்தி தந்திருந்தனர். இன்னும் சில ஏக்கர் நிலத்தை தோண்டினால் நாம் அதிசயிக்கத்தக்க பொருட்கள் நிறைய கிடைக்கும். இங்கு ஒரு மிகப்பெரிய நகரமே இருந்துள்ளது இதை நான் வலியுறுத்தவே என்னை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து விட்டனர்” என்று கூறுகிறார்.
பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் இலக்கிய ஆதாரங்களைப் போலவே எண்ணிலடங்காத வரலாறுகளும் மற்றும் தொல்லியல் ஆதாரங்களும் உள்ளன. இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் காலத்தால் மிகப் பழமையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது தமிழகத்தில்தான். ஆக உலகம் முழுவதும் தமிழரே தமது கலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தார்கள் என்றும் உறுதியானாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகமே