ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுபயங்கரவாதத்திற்கு வழி வகுக்கும் அடிப்படைவாத அமைப்புகள் இனி இலங்கைக்குள் செயல்பட அனுமதிக்கப்படாது சுதந்திரதின உரையில் ஜனாதிபதிதெரிவிப்பு.

பயங்கரவாதத்திற்கு வழி வகுக்கும் அடிப்படைவாத அமைப்புகள் இனி இலங்கைக்குள் செயல்பட அனுமதிக்கப்படாது சுதந்திரதின உரையில் ஜனாதிபதிதெரிவிப்பு.

0Shares

இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது.

இன்றைய தினம் அரச, தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபஜ ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்தர தின வைபவ உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆற்றிய உரை பின்வருமாறு:

அதி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினர்களேஏனைய வணக்கத்துக்குரிய மதத் தலைவர்களேகௌரவ பிரதமர் அவர்களேகௌரவ சபாநாயகர் அவர்களேகௌரவ பிரதம நீதியரசர் அவர்களேகௌரவ அமைச்சர்களே, இராஜாங்க அமைச்சர்களேபாராளுமன்ற உறுப்பினர்களேகௌரவ ஆளுநர்களேகௌரவ தூதுவர்களே, உயர் ஸ்தானிகர்களே

கௌரவ தூதுவர்களே, உயர் ஸ்தானிகர்களேஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சகல அரசாங்க உயரதிகாரிகளேபாதுகாப்பு உயரதிகாரி மற்றும் இராணுவத் தளபதி அவர்களேவான்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி அவர்களேபொலிஸ் மா அதிபர் அவர்களேசிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களேபிரதம விருந்தினர்களேஇராணுவ வீரர்களேதேசத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளே, அன்புக்குரிய பிள்ளைகளேஇலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது. இன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன்.

இச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக தம்மை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பர்கர் ஆகிய தலைவர்களுக்கு எனது பெருமதிப்பை செலுத்துகின்றேன்.

இலங்கையினுள் வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமையுண்டு.

அவர்களது சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும், சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்பொழுதும் உறுதி செய்வோம்.

எந்தவொரு பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்காகவுள்ள உரிமையை நாம் எப்பொழுதும் மதிப்போம். தத்தமது நண்பர்களை தெரிவு செய்வது போன்று அமைதியான ஒன்று கூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு.

இலங்கைப் பிரஜையொருவர் தான் தெரிவு செய்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயற்பாட்டிலும் அரச நிருவாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்.

இவை அனைத்தும் எவராலும் சவால்விட முடியாத மனித உரிமைகள் என்றே நாம் கருதுகிறோம். ஜனநாயகத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது எம்மால் சரிசமப்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறையானது அதன் போது மிக முக்கியமாகிறது. அதிகாரப் பரவலாக்கலின் போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு இடையே சிறந்த ஒருமைப்பாடு இருக்க வேண்டும்.

பொது மக்களும் பாதுகாப்புத் துறைகளும் ஒவ்வொருவரின் பொறுப்புக்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பிரஜைகளுக்கு தனிப்பட்ட உரிமைகளைப் போன்று கூட்டுரிமைகளும் உள்ளனவென்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு இதன்போது முக்கியமாகிறது.

சுதந்திரத்தின் பின் இக் குடியரசுக்குள் ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரச தலைவரும் சர்வஜன வாக்கு அதிகாரத்தின் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டனர். அவ்வாறு மக்கள் வாக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரச தலைவர் என்ற வகையில் எனது பதவிக் காலத்திற்குள் நாட்டின் அனைவரினதும் தலைவராக, நாட்டின் நலன்கருதி உச்சகட்ட அர்ப்பணிப்போடு சேவையாற்ற நான் தயாராக உள்ளேன்.

ஜனநாயக ரீதியிலான ஒரு நாட்டில் தகுந்த திறமுறைக்கமைய அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாவார். அவர் தனது பதவிக் காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராகார். ஒரு சமூகத்திற்கு சேவை புரியும் அரசியல் தலைவரல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்குள்ளது.

ஜனாதிபதியாக இன, மத, கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையே நான் இன்று பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற் காகவும் வலுவான நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் அத்துடன் தன்னாதிக்கமுள்ள நீதிமன்றமும் தேவைப்படுகிறது.

ஒரு நாட்டின் இருப்புக்காக இன்றியமையாத இம் முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்தவொரு வகையிலும் மக்கள் நம்பிக்கை சீர்கெடுமானால் அது ஒரு நாட்டின் அராஜகத்திற்கு காரணமாகும். ஆகையால் அனைத்துத் தரப்புகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாட்டின் நலன் கருதியும், மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கான தேசிய நோக்கையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இந்நாட்டு மக்களின் தேவைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு எனக்கு உண்டு. அது எனது பொறுப்பும் கடமையுமாகும். அதனை செயற்படுத்துவதற்கான எந்தவொரு தடையையும் அரசாங்க உத்தியோகத்தர்களிடமிருந்தோ அல்லது சட்டவாக்கத் துறையினரிடமிருந்தோ, அல்லது நீதித்துறையிடமிருந்தோ நான் எதிர்பார்ப்பதில்லை.

நான் உங்களது சுதந்திரத்தை மதிப்பது மட்டுமல்லாது அதன் வளர்ச்சிக்காகவும் அர்த்தமுள்ள ஜனநாயக நாட்டில் அரசியல், பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயலாற்றுவதற்காகவும் உறுதியளிக்கின்றேன். நீண்ட காலமாக அரசாங்க நிருவாக விஸ்தரிப்பு முறையினால் மக்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

தகுந்த ஆய்வு அல்லது ஒருங்கிணைப்பின்றி விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளினால் இன்று மக்கள் பெரும் தொல்லைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனூடாக பல ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் காலம், வளங்கள் மற்றும் ஜீவனோபாயம் போன்றவற்றை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.மனிதர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான அநேகமான தேவைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் தேவைகளை நாங்கள் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தவறுகளை புரிகின்ற அற்பமானவர்களுக்கு எதிராக உடனுக்குடன் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதே தவிர பெரும்பாலானவர்களின் மீது தேவையற்ற கடப்பாடுகளை விதிப்பதை நாங்கள் மேற்கொள்ளலாகாது. சட்டத்தை மதித்தும், ஒழுக்கப் பண்பாட்டோடும், நன்நெறிகளோடும் வாழ்வதற்கான உண்மைச் சுதந்திரத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்கள் சுதந்திரமாக சுயதொழிலினை, பாரம்பரிய கைத்தொழிலினை அல்லது தொழிற்றுறையினை புரிவதற்குத் தடையாகும் காலங்கடந்த சட்டதிட்டங்கள், வரி மற்றும் ஒழுங்கு விதிகள் கட்டணங்கள் துரிதமாகத் திருத்தப்பட வேண்டும்.மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள அநாவசியமான தடைகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

இலங்கை பழைமை வாய்ந்த வரலாற்றுடைய நாடாகும். பௌத்த தத்துவத்தினால் போஷிக்கப்பட்ட சகல மதத்தவர்களுக்கும், சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்பான நாடாகும்.

எனது ஆட்சிக் காலத்தினுள் எவரும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரத்தை நான் உறுதிப்படுத்துவேன். நீதி, நியாயத்தை உறுதிப்படுத்தும் அத்துடன் எந்தவொரு பிரசைக்கும் அநீதி விளையாத தார்மீகமான அரச நிருவாக முறையை நடாத்துவதற்கே பௌத்த தத்துவத்தின் மூலம் எமது ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.

எனது பதவிக்காலத்தினுள்ளும் இந்நாட்டில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை ஒழித்தல் மூலமே மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க முடிகிறது. ஒற்றையாட்சியினுள் எல்லாப் பிரஜைகளுக்கும் சம உரிமைகள் உரித்தாதல் வேண்டும்.

இன்றும் எமது மக்கள் சமூகத்தினுள் இருப்பவர், இல்லாதவர் எனும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. நகர்ப்புற பிரதேசங்களில் உள்ள வசதிகள் கிராமியப் பிரதேசங்களில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வசதிகள் சமநிலையில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் சமநிலையில் இல்லை. தொழில் வாய்ப்புக்கள் எல்லாப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படவில்லை.

இதுவொன்றும் இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ வலுப்படும் நிலைமைகள் அல்ல. அவை நாட்டின் பொதுப் பிரச்சினைகளாகும். வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் போது நாங்கள் முதன் முதலாக செய்ய வேண்டியது மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தலாகும். 

ஆகவே தான் நாங்கள் மக்களின் வறுமையை ஒழித்தலை அரசின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம். முப்பது வருட கால யுத்தத்தைப் போன்று மேலும் பல்வேறு காரணங்களினால் எமது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிகவும் தாமதமாகியுள்ளன. எம்மால் மேலும் காலத்தை வீணாக்க முடியாது.

எமது நாட்டின் விசேடமான புவியியல் அமைவு, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என்பவற்றை உரியவாறு பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் புதிய போக்குகளை அணுகி எமது அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

வினைத்திறன்மிக்க தூய்மையான ஒரு அரச சேவை நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாத காரணியாகும். மக்களுக்கு சுதந்திரத்தின் அதிகபட்ச பயன்களை வழங்குவதாயின் அரசாங்க நிருவாகம் உரியவாறு நடைமுறைபடுத்தப் படுதல் வேண்டும். இதற்காக முழு மொத்த அரசாங்க நிருவாகமே பொறுப்பை கையேற்க வேண்டும்.

பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், கள்வர்கள், எதிரிகள், குண்டர்கள், கப்பம் பெறுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துபவர்கள் ஆகியோரினால் இயல்பான மக்கள் வாழ்விற்கு தடைகள் ஏற்படுமாயின் அவ்விடத்தில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை.  தேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன்பாலும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளியோம். நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறிலிருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்குச் சுதந்திரம் இல்லை. அரச நிறுவனங்களினுள் ஊழல்கள், மோசடிகள் இருக்கும் வரை பொது மக்களுக்குச் சுதந்திரம் இல்லை.ஆகையால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து சமூக இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாகச் செயற்படுத்து வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இந்நடவடிக்கைகளை வினைத்திறமை யாக்குவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை தற்போது பாதுகாப்புத்துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.  சிந்திக்கும் சுதந்திரத்தையும், எழுதுவதற்கான சுதந்திரத்தையும் நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன். அப்போது தான் தத்துவஞானிகளைப் போன்று உயர்மட்ட கலை ஆக்கங்கள் உருவாகும்.

எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது.

எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம். சமூக ஊடகங்கள் சனநாயகத்திற்குப் புதிய சவால்களைத் தொடுக்கின்றது. இணையத்தளத்தில் அதிகமான காலத்தைக் கழித்துக் கொண்டு அநேகமான சந்தர்ப்பங்களில் அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொள்வதால் அவர்களது குற்றங்களின்படி பிழையான தகவல் பிரச்சாரங்களுக்கு உட்பட்டு தமது அபிப்பிராயங்களை விட வேறு அபிப்பிராயம் கொண்டவர்கள் தொடர்பில் உடனுக்குடன் தவறான அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பமுண்டு.உங்களது மனச்சாட்சியின்படி செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எப்பொழுதும் நாட்டைப் பற்றி சிந்தியுங்கள்.

ஏனைய சகோதர நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள். அரசியல் தேவைகளைப் பற்றி மட்டும் சிந்தியாது உங்கள் செயல்களினாலும் சொற்களினாலும் நாட்டுக்கு தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவும்.

எதிர்கால சந்ததியினருக்காக தற்கால சந்ததியினரால் தான் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். வரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவரினதும் வளமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கின்றேன்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments