ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஅபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் ஒன்றாக பயணிக்க வேண்டும்– ஜனாதிபதி

அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் ஒன்றாக பயணிக்க வேண்டும்– ஜனாதிபதி

0Shares

நாட்டினதும் எதிர்கால தலைமுறையினதும் நலனுக்காக அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் சமநிலையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

“அபிவிருத்தியின்போது உயிர் பல்வகைத் தன்மையை பாதுகாப்பதற்கு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் சுற்றாடல் அழிவுக்கும் சதுப்பு நிலங்கள் அழிவடையவும் காரணமாகின்றன.

உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் மூலம் கிடைக்கும் பெரும் பயன்களை நாம் இழந்து வருகின்றோம்.

இயற்கை அழிவைப்போன்றே கலாசாரமும் அழிவடைந்து வருகின்றது. சட்டதிட்டங்களினால் மட்டும் இந்த நிலைமையை மாற்ற முடியாது.

சுற்றாடல் பற்றிய மக்களின் நல்ல மனப்பாங்கும், தெளிவும் மிகவும் முக்கியமானதாகும்” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் இன்று (03) முற்பகல் இடம்பெற்ற உலக ஈர நில தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக ஈர நிலங்கள் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. “உயிர்ப் பல்வகைத் தன்மையைக்கொண்ட ஈர நிலங்கள்” என்பது இவ்வருடக் கருப்பொருளாகும்.

சுற்றாடல் அதிகார சபையும் வன ஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு சுற்றாடல் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்றாலும், அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்னடையக் கூடாதென்பதுடன், முதலீடுகளும் சுற்றாடல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவாறு மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றாடல் சட்டப் பாரம்பரியங்கள் தொழிற்துறைக்கு தேவையற்ற தடையாக இருக்கக்கூடாது.

உடனடி தீர்வுகளை மேற்கொள்ளாது சுற்றாடலும் சுதேச தொழிற்துறையும் பாதுகாக்கப்படுகின்ற வகையில் விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பற்றியும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

ஒரு கிராமத்தின் அழகும் கலாசார பெறுமானங்களும் எதிர்காலத் தலைமுறையினரிடம் பாதுகாப்பாக கையளிக்கப்பட வேண்டும். எமது நாட்டுக்கே உரித்தான தாவரங்கள், மூலிகைகள் போன்றே உயிரினங்களையும் பாதுகாத்து சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி துறையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஈர நிலங்களின் பெறுமானம் பற்றி பாடசாலை பிள்ளைகளினதும் மக்களினதும் மனப்பாங்கை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடளாவிய சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அன்பளிப்புகளையும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

அமைச்சர்களான கலாநிதி பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்ரசேன, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ்.அமரசிங்க, பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments